Header Ads

யாழில் பெருமளவான இராணுவம் குவிப்பு - வீடொன்றில் இருந்த ஒருவர் கைது

இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் சகோதரன் வீடொன்றில் மறைந்திருந்த போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்த வேளை அந்த வீட்டை இன்று பிற்பகல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால் முன்னாள் போராளி என அவரைக் குறிப்பிட்ட இராணுவத்தினர் மறுநாள் 16ஆம் திகதி நாகர்கோவில் பகுதி அதிகாலை 3 மணி தொடக்கம் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர்.

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை  மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் அந்த நபரைக் கண்டித்தனர்.

அதன்போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர், இராணுவச் சிப்பாயைத் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இராணுவச் சிப்பாயும் அந்த நபரைத் தாக்கியிருந்தார்.

சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்தனர். நாகர்கோவில் பகுதி மறுநாள் அதிகாலை 3 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டது.

நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சுற்றிவளைப்பு அன்றிரவே விலக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் கைது செய்யப்படாததால் இராணுவத்தினரின் தொடர் தேடுதல் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இராணுவத்தினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரது சகோதரன் நண்பர்களுடன் இருந்த வேளை  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இராணுவச் சிப்பாயைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் போராளி தலைமறைவாகி உள்ள நிலையில் இராணுவத்தினர் தொடர் தேடுதலை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.