Header Ads

நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பொலிஸார் தீவிர சோதனை



பிகில் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்துள்ளது.

அதில் பேசிய வாலிபர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து பொலிஸார் உடனடியாக நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் விஜய்யின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று பொலிஸார் கருதினர்.

மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி தொடங்கியது.

அப்போது போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரே மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.