Header Ads

மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி உணவத்தை முற்றுகையிட்ட பௌத்த தேரர்கள்



பல்லெபெத்த, கொஸ்வெட்டிய என்ற பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் பௌத்தர்களை அந்நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவதாக கூறி நேற்று முன்தினம் பௌத்த பிக்குகளும், பிரதேச மக்கள் சிலரும் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தனியார் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் வேறொருவருக்கு வழங்கியிருந்த உணவக உரிமையாளர் மற்றும் பெளத்த பிக்குகள் பிரதேசவாசிகள் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து மேற்படி உணவகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் மோதல் சம்பவமாக உருவாகும் நிலை ஏற்பட்டதால் அவ்விடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இப்பிரச்சினை தொடர்பில் அங்கு கூடியிருந்த அனைத்து தரப்பினருடனும் பொலிஸார் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவ்விடத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடத்தில் பெளத்த ஆலயம் ஒன்று பக்கத்தில் இருப்பதாகவும் இவ்வாறான விடயம் இவ்விடத்தில் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் அங்கு கூடிய பிக்குகள், பொதுமக்கள் கடுமையான தொனியில் எச்சரித்தனர்.

அத்துடன் தான் குத்தகைக்கு வழங்கிய இவ்விடத்தில் இவ்வாறான சம்பவ மொன்று நடப்பதை தான் அறிந்திருக்கவில்லை என அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து குற்றச்சாட்டு உண்மையானதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்த தையடுத்து அங்கு கூடியிருந்தோர் கலைந்து சென்றனர்.

Powered by Blogger.