Header Ads

இலங்கையிலும் பரவ ஆரம்பித்தது கொரோனா - பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொவிட் 19  என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் ஒருவருக்கு பரவியுள்ள நிலையில் அதனை மேலும் பரவாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைதிட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றானது பரவியுள்ள நிலையில் அதனை கட்டுபடுத்த வெவ்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் நேற்று மாலை இனங்காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக கடமையாற்றி வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபர் இத்தாலியிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார் எனவும் விசாரணைகளில் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சுற்றுலா பயணிகள் இலங்கையில் பயணித்த சுற்றுலா தளங்கள் மற்றும் தங்கியிருந்த விடுமுறை விடுதிகள் மற்றும் அவர்கள் நட்புகொண்டிருந்த இலங்கையர்களுக்கும் வைத்திய பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாட்டவர்களை தனிமைபடுத்தி சிகிச்சைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கொரோனா வைரஸை முழுமையாக இல்லாதொழிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது
Powered by Blogger.