Header Ads

மலையகத்தில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க நடவடிக்கை




ஊவா மாகாணத்தில் பரதநாட்டிய கலையை ஊக்குவிக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை திலகநர்த்தனாலயம் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'சலங்கைகள்
சங்கமம்' என்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பதுளையில் முதன்முறையாக தற்போது இரண்டு மாணவிகள் பரதநாட்டியத்தை முறையாக பயின்று பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றுள்ளதால் அவர்கள் அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட வேண்டியது கட்டாயம் எனவும் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் இருவருக்கும் நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை போன்று மலையகத்திலும் பரதநாட்டிய கலையை மேம்படுத்த வேண்டும் என கூறிய அவர், அதற்காக
தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களை ஊவா மாகாணத்திற்குள் உள்ளீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறான செயற்பாட்டின் மூலமே ஊவா உட்பட முழு மலையகத்திலும் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை அழியவிடாமல் பாதுகாக்கலாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்போது பதுளை மாவட்டத்தில் 200 க்கும் அதிகமான மாணவர்களை பயிற்றுவிக்க வடக்கை சார்ந்த யசோதரா விவேகானந்தன் ஆசிரியர்
எடுத்துவரும் முயற்சிகளுக்காக மலையக சமூகம் நன்றி கடன்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யசோதரா விவேகானந்தனின் கணிப்பின்படி மலையத்தை சேர்ந்த இந்த மாணவர்கள் ஏனைய பிரதேசங்களில் பரதநாட்டிய கலையை பயிலும்
மாணவர்களைவிட அதீத திறமைகளை கொண்டிருப்பது மகிழ்ச்சியையும், ஊக்கபடுத்துவதாகவும் அமைகின்றது.

Powered by Blogger.