சிவாஜிலிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைளை கட்சி எடுக்கக் கூடாதென கட்சியின் யாழ் மாவட்டக்குழு தீர்மானமொன்றை எடுத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
கட்சியின் யாழ் மாவட்ட கிளைக்கூட்டம் கட்சியில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே மாவட்டக் கிளை மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இத் தீர்மானத்தை இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்திலும் தெரியப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நாட்டில் நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிலும் குறிப்பாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ இதுவரையில் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்காத நிலையில் அக் கட்சியின் தவிசாளர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஐனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
இவ்வாறு தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கு கட்சியின் உயர் மட்டத்தில் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந் நிலையில் கட்சியின் யாழ் மாவட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டிருந்தது. இதன் போது சிவாஐலிங்கம் தேர்தலில் போட்டியிடுவதில் கட்சிக்கு அறிவிக்காமல் போட்டியிடுவதில் தவறுகள் இருந்தாலும் அது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் எடக்கப்பட வேண்டியதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடயத்திலும் ஏனைய பிரச்சனைகளுக்கான தீர்விற்கும் வழங்கப் போகும் எழுத்து மூல வாக்குறுதிகளையும் ஆராய்ந்து அதன் பின்னர் தேர்தல் குறித்து கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுவரையில் சிவாஜிலிங்கம் மீது கட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாதென்றும் கட்சியில் வழமையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எடுக்கலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைக் குழக் கூட்டத்திற்கும் தெரியப்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைக் குழக் கூட்டத்தில் சிவாஜிலிங்கம் தொடர்பில் ஆராய்ந்தாலும் சிவாஜிலிங்கம் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை கட்சியின் தலைமைக்குழு எடுக்கக் கூடாதென்றும் கட்சி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் மாவட்டக் குழு கோரியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Post a Comment