ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த தலைவர் யார்? புதிய திருப்பம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அல்லது முன்னாள் அமைச்சர் குமார வெல்கம ஆகியோரில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பு தெரிவிக்கின்றது.
அத்துடன், அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பு, சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான அறிவிப்பை நாளைய தினம் வெளியிடவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மங்கள சமரவீரவின் இல்லத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் அமைப்பாளர்களாக செயற்பாடுகின்ற சுமார் 100 பேர் வரை சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அந்த அமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு, கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக அந்த கட்சியை பாதுகாக்கும் அமைப்பு உறுதிப்பட கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment