சந்திரிகாவுடன் இணையத் தயாராகும் அர்ஜுன; கொழும்பு அரசியலில் பரபரப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ள அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள அந்த கட்சியின் உப தலைவரான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் இருவரும் இது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் நாடு திரும்பியதும் உடனடியாக இது சம்பந்தமாக இறுதி இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடந்த சனிக்கிழமை நாடு திரும்ப இருந்த நிலையில், அவர் தனது வருகையை மேலும் சில நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே தான் எப்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அன்னப் பறவை சின்னத்தின் கீழ் அரசியலில் ஈடுபட போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பும் போராட்டத்தில் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் அண்மையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த அவர், எனது ஊரில், எனது கட்சியினர் என்னை பொதுஜன பெரமுனவில் இணையுமாறு வலியுறுத்தி வருகின்றனர். எனினும் நான் எனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ள போவதில்லை.
தற்போதுள்ள நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக அழிந்து போகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இன்னும் எதிர்காலம் இருக்கின்றது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்னுடன் இணைந்தால், இந்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன். நான் மிகவும் விருப்பத்துடன் கட்சியை கட்டியெழுப்ப தலையீடுகளை மேற்கொள்வேன் என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment