முஸ்லிம் விரோத போட்டியில் தந்தை - மகன்; வடக்கில் நாமல், தெற்கில் மஹிந்த
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த நாட்களில் இருப்பது வடக்கிலாகும்.
அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிறு சிறு கூட்டங்களை நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (18) மாலை 4 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து கூட்டம் இடம் பெற்றது.
இதில் உரையாற்றிய நாமல்,
"முஸ்ஸிம் கிராமங்களில் இருக்கின்ற அபிவிருத்திகள் தமிழ் கிராமங்களில் இடம் பெறவில்லை. அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்று செய்து கொண்டு இருக்கின்றார்.
ஆனால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை அவர் திரும்பி பார்ப்பதாக இல்லை. வடக்கில் இருக்கின்ற அமைச்சர் என்கின்ற வகையில் அவர் தனது கடமைகளை செய்திருக்கவில்லை.
தமிழ் கிராமங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும். எங்களுடைய காலத்திலும் குறித்த அமைச்சர் அவ்வாறான வேலைகளை செய்து வந்தார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் மன்னாரை வைத்திருந்தார்." என்றார்.
இதேவேளை அங்குணுகொலபெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ,
"அடிப்படைவாதத்துக்கு உதவி வழங்கிய சில தலைவர்கள் தற்பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை. லட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் இல்லை.
இந்த நிலைமையை ஏற்படுத்தியது யார்? இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? சஹ்ரானா? அல்லது இந்த அரசாங்கமா? அல்லது சஹ்ரானுக்கு ஆதரவு வழங்கிய அரசாங்கமா?
சஹ்ரானை கைது செய்யும் போது சஹ்ரானைக் காப்பாற்றியது இந்த அரசாங்கமே. தற்பொழுது இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளருடன் தான் சஹ்ரான் ஆதரவாளர்கள் உள்ளனர்" என்று உரையாற்றியுள்ளார்.

Post a Comment