ராஜித சேனாரத்ன இன்னும் கைது செய்யப்படவில்லை - அதி தீவிர சிகிச்சை பிரிவில்
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் உடல்நலம், வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள மருத்துவ பரிந்துரைக்கு அமைய இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி மன்றாடியார் நாயகம் திலிப்ப பீரிஸ் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன காவற்துறையினரின் பாதுகாப்பின் கீழ் நரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
லங்கா தனியார் மருத்துவமனை மருத்துவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலிப்ப பீரிஸ் நிதிமன்றுக்கு விளக்கமளித்திருந்தார்.
இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பி அறிக்கை தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டியுள்ளதாக கூறி நீதவான் குறித்த வழக்கை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதேவேளை, நாரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துமவமனையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நாடாளுமன்ற உறுப்பினரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment