விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு
விவசாய நடவடிக்கைகளின் போது தமது விவசாயத்தை பாதுகாத்துக்கொள்ளும் பணிகளுக்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை உபயோகிப்பதற்கு அரசாங்கம் மீண்டும் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் இந்த விடயம் குறித்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் தமது விவசாயத்தின் பாதுகாப்பை கருதி இனிவரும் காலங்களில் விவசாயிகள் துப்பாக்கி உபயோகிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் விவசாயிகளுக்கு பெற்று கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு வழங்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பழங்காலத்தில் இருந்து விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளின் போது விவசாயத்தை பாதுகாக்க துப்பாக்கிகளை உபயோகித்துள்ளனர். இருந்தாலும் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள் வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது.
அதன்போது விவசாயிகளுக்கும் இந்த தடை அமுல் செய்யப்பட்டது. இருந்தாலும் அந்த தடையை நீக்கி அவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக துப்பாக்கி உபயோகிக்க அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment