ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டவர்களை தடுத்து வைக்க உத்தரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரையோ கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரை 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கட்டுநாயக்க காவல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர், இன்று மினுவாங்கொடை நீதவான் கேசர சீ.ஏ. சமரதிவாகர முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர், ஓட்டமாவடி, நீராவோடை, ஆலிம்பாதை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், மேலும் 3 பேருடன் கட்டுநாயக்க அமந்தொலுவ, ஜயவர்தனபுற பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், கைதுசெய்யப்பட்டதாக நீதிமன்றில் காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய சந்தேகத்துக்குரியவர்கள் ஏதேனும் குற்றம் ஒன்றை இழைக்க தயாரில்லை என்ற விடயம் உறுதியானதை அடுத்து, அவர்கள் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
27 வயதான சந்தேகத்துக்குரியவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப உறுப்பினரை கொலை செயற்வதற்காக திட்டமொன்றை தீட்டியிருந்தாக தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், இதன் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ், அவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும் காவல்துறை, நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, விடயங்களை ஆராய்ந்த நீதவான், அதற்கு அனுமதி வழங்கியதுடன், விசாரணை நிறைவடைந்தவுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment