Header Ads

விஷேட மேல் நீதிமன்றம் அமைப்பதை திட்டமிட்டு தாமதப்படுத்திய ரணில்


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பலவீனமான தலையீடு காரணமாகவே பாரிய ஊழல், மோசடி வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விசேட மேல் நீதிமன்றங்களை உடனடியாக ஏற்படுத்த முடியாது போனதாக தெரியவருகிறது.


பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் விசேட மேல் நீதிமன்றங்கள் தொடர்பான சட்டமூலங்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், விசேட மேல் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படுவதை ரணில் விக்ரமசிங்க தந்திரமான முறையில் தாமதித்ததாக கூறப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவி வகித்த நபரும் இதற்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த அமைச்சரே ரணில் விக்ரமசிங்கவின் தேவையை நிறைவேற்றியுள்ளார்.

எவ்வாறாயினும், வெளி சமூகத்தில் இருந்து எழுந்த எதிர்ப்பு காரணமாகவே கடந்த அரசாங்கம் தாமதித்தேனும் விசேட மேல் நீதிமன்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டிடங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்ததுடன் நீதிமன்ற வளாகத்தில் இடம் இல்லை எனவும் குறைந்தது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட மேல் நீதிமன்றத்தை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதன் காரணமாக நீதியமைச்சராக தலதா அத்துகோரளவினால் விசேட மேல் நீதிமன்றத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்திலேயே விசேட மேல் நீதிமன்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன.

எது எப்படி இருந்த போதிலும் இந்த விசேட மேல் நீதிமன்றங்கள் முன் கூட்டியே ஆரம்பிக்கப்பட்டிருந்தால், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி பலர் தண்டனைகளை அனுபவிக்க வாய்ப்பு இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உள்ளக அரசியல் கொடுக்கல், வாங்கல்கள் காரணமாக தேவையானதை தேவையான நேரத்தில் செய்ய முடியாமல் போனதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அணி ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரி டி.எச்.கே. மஹாநாகம, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் ஜீ.திஸாநாயக்க ஆகியோருக்கு இலஞ்சம் பெற்ற வழக்கில் தண்டனை வழக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே விசேட மேல் நீதிமன்றம் தொடர்பாக மறைக்கப்பட்டிருந்த கதை வெளியே தெரியவந்துள்ளது.
Powered by Blogger.