Header Ads

நாட்டிலிருந்து தப்பிச் சென்றார் ராஜிதவின் ஊடகச் செயலாளர்



ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது அவரது ஊடகச் செயலாளராக கடமையாற்றிய எம்.ஐ.ஜே.மலித் விஜேநாயக்க நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.


அவரை கைது செய்வதற்காக பிடியாணை பெற்றுக்கொண்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகள் குழு கடந்த 14ஆம் திகதி அவரை கைது செய்ய அவரது வீட்டை முற்றுகையிட்ட போது அவர் வீட்டில் இருக்கவில்லை.

பொலிஸ் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டை சோதனையிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக விஜேநாயக்கவின் மடிக் கணனி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன்பின்னர் பொலிஸார் பல முறை விஜேநாயக்கவின் வீட்டை சோதனையிட்டுள்ளதுடன் அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் சம்பந்தமான ஊடக சந்திப்பு மற்றும் அது தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சாரதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தவே மலித் விஜேநாயக்கவை கைது செய்ய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் பிடியாணை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பில் அண்மையில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி சம்பந்தமான விடயங்களை வெளியிட்டு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நடத்திய செய்தியாளர் சந்திப்பு சம்பந்தமான மேலதிக தகவல்களை கண்டறிவதற்காக பொலிஸார் மலித் விஜேநாயக்கவை தேடி வருகின்றனர்.

மலித் விஜேநாயக்கவிடம் இருந்து பல முக்கிய தகவல்களை வெளிக்கொண்டு வர முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் தப்பிச் சென்றுள்ள நாட்டை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலித் விஜேநாயக்க, ராஜித சேனாரத்னவுக்கு எதிரான முக்கிய சாட்சி என்பதால், அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என பொலிஸாருக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு செல்லும் வழியில் கட்டார் விமான நிலையத்தில் தமது குடும்ப உறவினர்களை அழைத்துச் செல்லும் புகைப்படத்தை மலித் விஜேநாயக்கவே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

ஊடகங்கள் வழியாக பல்வேறு அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மலித் விஜேநாயக்க, ராஜித சேனாரத்னவின் ஊடக செயலாளராக கடமையாற்றுவதற்கு முன்னர் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் செயலாளராகவும் கனிஷ்ட சட்டத்தரணியாகவும் கடமையாற்றியுள்ளார்.
Powered by Blogger.