1000 ரூபா வழங்காவிட்டால் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா நாளாந்த வேதனத்தை வழங்காவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை அதன் பின்னரே தீர்மானிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பை தோட்ட நிறுவனங்கள் புறக்கணித்துள்ள நிலையில், குறித்த நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்கள் அரசுடமையாக்கப்படுமா? என்றும் அதிகரிக்கப்பட்ட வேதனத்தை வழங்குவதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்றும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன, இன்னும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆகவில்லை என குறிப்பிட்டார்.
சொல்வது என்பதும், செயற்படுத்துவது என்பது வேவ்வேறானதாகும். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்களா, என்பதை முதலாம் திகதிவரை பார்ப்போம்.
இல்லாவிட்டால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பதை பார்ப்போம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment