வவுணதீவு பொலிஸார் கொலைச் சம்பவத்தில் வௌிவந்துள்ள தகவல்கள்
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங்கட்டை பிரதேசத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் அவரின் பண்ணை வீட்டின் முன்னாள் வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாகவும் வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூர் 7 ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று (05) இரவு வவுணதீவு ஆயித்தியமலை வீதியிலுள்ள 3ம் கட்டை பிரதேசத்தில் தனது பண்ணைக்கு சென்றிருந்த நிலையில் இரவு 11 மணியளவில் பண்ணையில் இருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதை கண்டு யார் என கேட்ட போது, மது அருந்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது பொலிஸ் சாஜன் இல்லை நீங்கள் மாடு களவு எடுக்க வந்துள்ளீர்களா எனகேட்ட போது அவர்கள் குறித்த சாஜனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சண்டை மூண்டதையடுத்து சாஜன் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியதையடுத்து அவர் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர் என இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.
அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு நாவற்குடா ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் என்பவர்களே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சாஜனின் தாக்குதலில், கைது செய்யப்பட்ட முகமட் அஸ்மி மீது அடிகாயங்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர் .
இதேவேளை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.

Post a Comment