சஜித்தை விடாமல் துரத்தும் நெருக்கடி - அன்னத்தைப் பெறுவதிலும் சிக்கல்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி, புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டால் மாத்திரமே அன்னப்பறவை சின்னத்தை வழங்குவதற்கு இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முன்னணியின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சின்னத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் உறுப்பினர்கள் எவரும் புதிய ஜனநாயக முன்னணியுடன் இதுவரை கலந்துரையாடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அன்னப்பறவை சின்னத்தை எதிர்வரும் பொது தேர்தலுக்காக வழங்குதற்கு புதிய ஜனநாயக முன்னணி இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நிலவும் சட்ட சூழலில் அரசியல் கட்சி ஒன்றின் சின்னத்தை வேறு ஒரு அரசியல் கட்சிக்கு வழங்கப்படுமாயின், அந்த சின்னத்தை கொண்ட ஆரம்ப கட்சி குறித்த சின்னத்தை கைவிட வேண்டும்.
எனவே 25 வருடங்கள் பழமையான தமது கட்சியின் சின்னத்தை நீக்கி விட்டு கட்சியின் சின்னமான அன்னப்பறவை சின்னத்தை வேறு பெயரில் பதிவு செய்யப்படவுள்ள கட்சிக்கு வழங்க ஒருபோதும் இணக்கம் வெளியிடப்பட மாட்டாது என புதிய ஜனநாயக முன்னணியின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால் அந்த முன்னணி புதிய ஜனநாயக முன்னணியிலேயே போட்டியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment