Header Ads

ஸ்மாரட் போன் மூலம் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.


இந்தியாவின் நிதித்தலைநகரம் என்ற பெருமைக்குரிய மும்பை மாநகரில் உள்ள டி.ஒய்.பாட்டீல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி மாணவர்கள் இணைந்து கொரோனா வைரஸ் கண்டறிவதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் காப்புரிமை பெற்ற, ஏ.ஐ. என்று சொல்லப்படக் கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்தக் கருவியுடன், ஸ்மார்ட் போனை பயன்படுத்தி, குரல் அடிப்படையிலான சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

இந்த கருவி, ஒரு செயலி (ஆப்) மூலம் குரல் அடிப்படையில் ஆய்வு செய்து கொரோனா வைரசை கண்டுபிடித்து விடுகிறது.

இதே போன்று குரல் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு கருவியை உருவாக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த தருணத்தில் மும்பை மாணவர்கள் இதைக் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

இவர்கள் கண்டுபிடித்துள்ள கருவியை இத்தாலியில் ரோம் நகரில் உள்ள டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தில் சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே 300 பேருக்கு இந்த கருவியைக்கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதில் 98 சதவீதம் துல்லியமான முடிவு கிடைத்திருக்கிறது என்பதுதான் மகிழ்ச்சி தரக்கூடிய தகவலாக அமைந்துள்ளது

மாணவர்களின் கண்டுபிடிப்பை மேற்பார்வை பார்த்து வந்த பேராசிரியர் சந்தோஷ் போத்தே இதுபற்றி கூறும் கருத்து இது:-

“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், குரல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு கருவியை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய கருவியானது, வெற்றிகரமான செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இத்தாலியில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை வெற்றிகரமாக கண்டறிய இது பயன்பாட்டில் இருக்கிறது. இதைக் கண்டுபிடித்துள்ள மாணவர்களிடம் நோயாளிகள், மாதிரிகள் என முழு அளவிலான தரவுகளை கொண்ட மென்பொருள் இருக்கிறது.

தற்போது ரோமில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை கண்டுபிடிப்பதில் இந்த கருவி வெற்றிகரமாக உதவி வருகிறது”.

இந்த கருவி எப்படி செயல்படுகிறது என்கிறபோது அதற்கு பேராசிரியர் சந்தோஷ் போத்தே கூறும் பதில்:-

“செயலியில் உள்ள மைக்கில் ஒருவர் பேசும்போது, பல்வேறு அளவுருக்களில் குரல் அதிர்வு, சத்தம் விலகல் என பல்வேறு வகைகளில் குரல் உடைகிறது.

இந்த மதிப்பீடுகள், சாதாரண நபர் ஒருவரின் மதிப்பீடு களுடன் ஒப்பிடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து காப்புரிமை பெற்றுள்ள தொழில் நுட்பம், சம்மந்தப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிகிறது” என்கிறார்.

ரோம் நகரில் இந்த கருவியை சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிற டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியோவானி சாகியோ, “ஆடியோ அடிப்படையிலான நோய் கண்டறியும் கருவி, சம்மந்தப்பட்ட நபரின் குரலின் சுரத்தில் இருந்து கொரோனா வைரசை கண்டுபிடிக்கிறது” என்று சிலிர்த்துப் போகிறார்.

தொடர்ந்து அவர் சொல்கிறார்.

“ஒவ்வொருவரின் குரலிலும் 6,300 அளவுருக்கள் இருக்கின்றன. ஒரு சில அலகுகள் மட்டுமே, ஒரு டஜனுக்கும் குறைவானவை, தனிநபர்களை குறிக்கின்றன. அவற்றில் சளியைத்தவிர மற்றவற்றை மனித காதுகளால் வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறது.

நமது உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றும், ஒரு ஒத்ததிர்வு கொண்டவை ஆகும். எனவே நம் இதயத்திலோ, நுரையீரலிலோ சிக்கல் இருந்தால், அது நமது குரலில் பிரதிபலிக்கும்.

ஒரே நபருக்கு அவர் ஆரோக்கியமாக இருக்கிறபோது ஒரு குரல் இருக்கும். நோய் இருந்தால் வேறொரு குரல் இருக்கும்.

நுரையீரல் மற்றும் காற்று அலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துவதால், குரல் நிச்சயம் பாதிக்கப்படுகிறது. இதை வைத்து கொரோனா வைரசை கண்டறிய முடியும்” என்கிறார் பேராசிரியர் ஜியோவானி சாகியோ.

தற்போது ரோமில் சோதனை ரீதியில் பயன்படுத்தப்படுகிற கருவி, சீக்கிரமாக அடுத்த ஒப்புதல்களைப் பெற்று வணிக ரீதியில் சந்தைக்கு வருகிறபோது.

அது உண்மையிலேயே கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை எளிதாக கண்டு பிடிக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாலைமலர்
Powered by Blogger.