நாளை முதல் வழமைக்கு திரும்பும் நாடு - இரண்டு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு
நாடு முழுவதும் தற்சமயம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சுமார் ஒன்றரை மாதமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் இயல்பு நிலையை, நாளை முதல் கட்டம் கட்டமாக வழமைக்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலாகும் பகுதிகளில், பொதுமக்கள் வெளியே செல்வதற்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையான கொண்ட முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, அத்தியாவசிய தேவைக்காக வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு செல்ல அவசியமானவர்கள், குறித்த தினத்தில் செல்ல வேண்டியவர்கள் எந்த இலக்கங்களை உடையவர்கள் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாராந்த மற்றும் நாளாந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சனசமூக நிலையங்கள், சிற்றுண்டிசாலைகள் என்பனவற்றை நாளை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, தனியார் சுகாதார மையங்கள் நாளை முதல் திறக்கப்படும் என்றும் ஊடங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் நாளை காலை 7 மணிமுதல் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக வீதி கடந்த வாரம் முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வெளிச்சுறுவட்ட நெடுஞ்சாலைகள் என்பன நாளைய தினம் திறக்கப்படவுள்ளன.
தொழிலுக்காக செல்லும் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 2 வாரக்காலப்பகுதிக்கு பொதுமக்களுக்கான பொதுபோக்கு வரத்தினை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நோய் அறிகுறிகளின்றி சமூகத்தில் தொடர்ந்தும் நடமாடக்கூடிய கொரோனா நோயாளர்கள் குறித்து பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என பொறளை மருத்துவ ஆய்வகத்தின் பணிப்பாளரான, மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், 200 இற்கும் குறைவான பொதுமக்களே நோயாளர்களாக உள்ளதுடன், ஏனைய அனைவரும் முப்படைகளையும் சேர்ந்தவர்களாவர்.
எனவே, பொதுமக்கள் தரப்பிலுள்ள குறித்த 200 இற்கும் குறைவான நோயாளர்களை முகாமைத்துவம் செய்ய முடிந்தாலுரும்கூட, நோய் அறிகுறிகளின்றி நோயை பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்களினால் எதிர்காலத்தில் நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைமை உள்ளது.
இந்த நிலையில், சுகாதார பாதுகாப்பு முறைமைகளை உரிய முறையில் பின்பற்றி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு நோய்தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதிருப்பதே தற்போதைய நிலையில், ஆற்றக்கூடிய சிறந்த பணியாகும் என பொறளை மருத்துவ ஆய்வகத்தின் பணிப்பாளரான, மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment