Header Ads

இறுதி வரை தனது ஆசையை நிறைவேற்ற முடியாமல் ஓய்வு பெறப்போகும் மைத்திரி



இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதை தடுக்குமாறு உத்தரவொன்று வௌியிடுமாறு கோரி பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட 15 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (29) புவனெக அலுவிஹாரே, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த நீதியரசர்களால் இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து மனுக்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் அழைப்பதாக உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதை தற்காலிகமாக தடை செய்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டனர்.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி தீர்ப்பளித்திருந்தனர்.

மாற்றுக் கொள்கைகள் மையம், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சில தரப்பினரால் குறித்த 15 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.