கட்சி மாறும் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள்; அதுக்கு காரணம் சந்திரிகா தான்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பொறுப்புகூறவேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
2015 இல் சந்திரிக்கா அம்மையார் கட்சியை இரண்டாக உடைத்திருக்காவிட்டால் தற்போது மாற்றுகட்சியொன்று உருவாகி இருக்காது.
ராஜபக்சக்களுடனான தனிப்பட்ட பகைமை காரணமாக அன்று அவர் கட்சியை பணயம்வைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்ததாலேயே இன்று சுதந்திரக்கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே, இனிமேலும் அவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடமாட்டார் என நம்புகின்றோம்.
சில தொகுதி அமைப்பாளர்கள் பணத்துக்கு அடிபணிந்து கட்சி மாறலாம். அத்தகையவர்களுக்கு சந்திரிக்கா தலைமை வகிக்கமாட்டார் எனவும் நம்புகின்றோம்.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் ஒருபோதும் தனித்துவத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம்.
பொதுத்தேர்தலில் பொதுசின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment