பிரதமர் பதவியை ஏற்காமல் இருக்க தீர்மானித்துள்ள மஹிந்த
காபந்து அசராங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்பொழுது நிறுவப்பட உள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மஹிந்த தீர்மானித்துள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
இந்த காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பதவி தினேஷ் குணவர்தனவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு வலுத்து அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் தற்காலிக அடிப்படையில் தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர்கள் நியமிப்பதில் காணப்படும் சில சிக்கல் நிலைமைகளின் காரணமாகவே இவ்வாறு தினேஷ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு மஹிந்த திட்டமிட்டுள்ளதாக அந்த இணைய தளம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், ரணில் பிரதமர் பதவியில் நீடிப்பாரா அல்லது வேறும் ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment