Header Ads

சம்பிகவின் குற்றங்களை மறைத்தமைக்காக தகுதியற்ற பொலிஸ் மா அதிபர் நியமனம்


எந்தவிதமான தகைமைகளும் அற்ற ஒரு நபர் நாட்டில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க பிரதான காரணம், தாம் செய்த குற்றங்களை அவர் மூலம் முடிமறைக்கும் உள்நோக்கத்தில் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையிலேயே தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நியமனம் பெற்றுள்ளார் என அவர் குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;

பூஜித் ஜயசுந்தர பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்யபட்டபோது முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அதில் ஒரு முக்கிய அங்கத்தவராக இருந்தார். சம்பிக்க ரணவக்க செய்த பல குற்றங்களை அவர் மூடிமறைக்க உதவி செய்துள்ளார்.

அதனால் தான் எவ்வித தகைமைகளுமற்ற பூஜித் ஜயசுந்தரவுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்கப்பட்டது. குற்றங்களை மூடிமறைத்தமைக்காக அவருக்கு வழங்கப்பட்ட பரிசே இந்த பதவியாகும். அதன் இறுதிப் பெறுபேறாக தான் நாட்டில் 300கும் மேற்பட்டோர் பரிதாபமாக கொல்லப்பட்டமையாகும். அது நாட்டில் ஏற்பட்ட பாரிய உயிர் சேதமாகும்.

அது மட்டுமா? இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அது அனைத்துக்கும் தகைமை அற்ற ஒருவர் பொலிஸ்மா அதிபர் பதவி வகித்தமையே ஆகும்.

இது அனைத்துக்கும் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் ராஜகிரிய வீதி விபத்தே காரணம். என்னவென்றால் இந்த விபத்து தொடர்பான உண்மைகளை பூஜித் ஜயசுந்தர மூடி மறைத்தமையினால் தான் அவருக்கு பொலிஸ்மா அதிபர் பதவி கிடைத்தது.

ராஜகிரிய விபத்தினால் "சந்திப்" என்னும் இளைஞன் ஊனமுற்றார். ஆனால் அந்த விபத்தின் தாக்கம் இன்று உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வரை வந்து 300க்கும் அதிகமான உயிர்களை பறித்தது மட்டுமன்றி மேலும் 500கும் அதிகமானவர்களை காயமடைய வைத்துள்ளது.

இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் எதிர்வரும் தினங்களில் நீதிமன்றில் ஆராயப்படும் என நான் நினைக்கின்றேன்.

Powered by Blogger.