Header Ads

ஜனாதிபதி தலைமையில் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

8 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


அதனை அடுத்து பாராளுமன்ற கூட்டத் தொடர் அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அன்றைய தினம் அரச கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததன் பின்னர் பிற்பகல் 12.30 இல் இருந்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதில் 2020 ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் சபை நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (23) இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனவரி மூன்றாம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தொடரின் போது புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதுடன், அதேபோல் சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவராக அன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

மேலும் நேற்றைய கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள 4 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது இடம்பெறவுள்ள நிகழ்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவபடுத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, மஹிந்த அமரவீர ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், அஜித் பி பெரேரா மற்றும் நிரோஸன் பெரேரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித்துக்கு அருகில்,பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்கப்படாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையிலேயே ரணிலுக்கு ஆசனம் ஒதுக்கப்படும் என பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powered by Blogger.