ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதிக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை
3 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிலுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதற்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.
மேலும், இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபாவினை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றினால் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதிவாதி ஒருவருக்கு சார்பாக வழக்கொன்றின் தீர்ப்பை வழங்குவதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிலுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பிரதிவாதிகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பளித்துள்ளார்.

Post a Comment