Header Ads

அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே அடையாள அட்டையின் இறுதி இலக்க விதி

அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியேறுவோர் தமது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை அடிப்படையாக கொண்டே வெளியேற முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


கட்டாயமாக சேவையில் ஈடுபட வேண்டியவர்கள் தவிர்ந்த ஏனையோர் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, திங்கட்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 1 அல்லது 2 என்ற எண்களை கொண்டவர்களும், செவ்வாய்கிழமைகளில் 3 அல்லது 4 என்ற எண்களை கொண்டவர்களும், புதன் கிழமையில் 5 அல்லது 6 என்ற எண்களையும், வியாழக்கிழமையில் 7 அல்லது 8 என்ற எண்களை கொண்டவர்களும், வெள்ளிக்கிழமையில் 9 அல்லது 0 என்ற எண்கள் அடிப்படையிலும் வெளியேறவேண்டும்.

இந்த நடைமுறை நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில், அரச மற்றும் தனியார்துறையில் தொழில்புரிபவர்கள், நாளாந்த வேதனத்தின் அடிப்படையில் தொழில் புரிபவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த நடைமுறை தாக்கம் செலுத்தாது.

குறித்த மாவட்டங்களில் உணவு உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள பொதுமக்கள் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.