Header Ads

ஈஸ்டர் தாக்குதல் - கல்பிட்டி சந்தேகநபருக்கு கொழும்பு 15 இல் அலுவலகம் - பல ஆவணங்கள் மீட்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புத்தளம் - கற்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவரது கொழும்பு - 15 பகுதியிலுள்ள அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது.


குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமை அழைத்து, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் இளைஞர்களுக்கு அடிப்படைவாத போதனை நிகழ்த்தியமை மற்றும் ஆயுத பயிற்சி வழங்கியமை தொடர்பில் கற்பிட்டி பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

சஹ்ரான் ஹஸீமிற்கு மேலதிகமாக, ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவரும், குறித்த பகுதியில் அடிப்படைவாத போதனை நிகழ்த்தியிருந்தாகவும் காவல்துறை பேச்சாளர் முன்னர் அறிவித்திருந்தார்.

இதேவேளை சந்தேகத்திற்குரியவரால் முந்தல் - மதுரங்குளி பகுதியில் நடத்தி செல்லப்பட்ட பயிற்சி மையத்தில் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த அரச சார்பற்ற   நிறுவனத்தின் தலைமையகமாக செயற்பட்டு வந்த  புத்தளத்தில் உள்ள நிறுவனத்தையும் சீல் வைத்து பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பண பற்றுச்சீட்டுகள் மாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலான வங்கி கணக்குகள் மற்றும் பணம் செலவிடப்பட்ட விதம் உள்ளிட்ட ஏனைய விபரங்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.