தனது முடிவை ஒருபோதும் மாற்றப் போவதில்லை - முடியாதவர்கள் விலகிக் கொள்ள வேண்டும்
தனியார்துறை சார்ந்த தொழிலதிபர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தனது முடிவை ஒருபோதும் மாற்றப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை. அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினையை தீர்ப்பதன்றி அதிலிருந்து விலகிக்கொள்வதல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தன்னிடம் தௌிவான, தவறில்லாத ஒரு கொள்கை இருப்பதாகவும், அந்தக் கொள்கையின் படி செயற்பட வேண்டும் என்றும், அவ்வாறு முடியாதவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் சரியான கொள்கை சார்ந்த தீர்மானமொன்றை எடுக்கும் போது அனைத்து அரச நிறுவனங்களும் அந்த கொள்கைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். சரியானதை செய்வதற்கு ஒருபோதும் தடையிருக்கக் கூடாது.
சரியானதை செய்ய முடியாத அரச அதிகாரி நாட்டுக்கு ஒரு சுமை. அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினையை தீர்ப்பதன்றி அதிலிருந்து விலகிக்கொள்வதல்ல.
பல வருடங்களாக எதனோல் இறக்குமதி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனியார் வியாபாரிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அந்த தீர்மானத்தை மாற்றப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Post a Comment