தீவிரவாத அச்சுறுத்தலா? பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்தான செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த உளவுத்துறை பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பொது மக்களை தவறாக வழி நடத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களை கோரியுள்ளார்.
இந்த உண்மைக்கு புறம்பான செய்திகளால் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இராணுவ மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எவ்விதத்திலும் புறக்கனிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.
Post a Comment