சஹ்ரான் ஹாசிமை கைது செய்ய வேண்டாம் எனக் கூறிய பூஜித மற்றும் நாலக சில்வா
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹசீமை கைது செய்ய வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் நீர்கொழும்பு வலய புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகரே இந்த விடயத்தை ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கு இடையிலான மோதலில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட சஹ்ரான் ஹசீமை கைது செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும், இதன் போதே அவரை கைது செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
2017ம் ஆண்டு தான் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவில் சேவையாற்றியதாக அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது சஹ்ரான் ஹாசிமின் புகைப்படம் தன்னிடம் இருந்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியான சஹ்ரானும், காத்தான்குடி மோதலுடன் தொடர்புடைய சஹ்ரானும் ஒரே நபர் என்பதை அப்போது தான் அறிந்திருக்கவிலலை என்று கூறியுள்ளார்.
இதன்போது, சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் இணையத்தின் ஊடாகவேனும் தகவல் திரட்டவில்லையா என்று ஆணைக்குழு வினவியதற்கு, தனக்கு இணையத்தளம் மற்றும் கணினி தொடர்பான அறிவு இல்லை என்று உப பொலிஸ் பரிசோதகர் சாட்சியமளித்துள்ளார்.
2017ம் ஆண்டு காத்தான்குடி மோதல் சம்பவம் தொடர்பில் சஹ்ரானை கைது செய்வதற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஊடாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் அனுமதி பெற வேண்டி இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு மோதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின் அதற்கு அனுமதி கிடைத்த போதிலும், சஹ்ரானை கைது செய்யும் திட்டத்தை கைவிடுமாறு பூஜித் ஜயசுந்தர ஆலோசனை வழங்கினார் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தனக்கு அறிவித்ததாக அவர் சாட்சியமளித்தார்.
அந்த சம்பவத்தின் பின்னர் தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருந்து நாட்டின் பல பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்ய நாலக சில்வா நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

Post a Comment