மாளிகாவத்தை சம்பவம் - உண்மையில் நடந்தது என்ன?
கொழும்பு - மாளிகாவத்தையில் நிவாரண நிதி வழங்கும் நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
நிதி நிவாரணம் பெறுவதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் வரை வந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்வையிட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களில் இருவரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள்...!
பணத்தினை பெற்றுக்கொள்ள கிடைக்கவில்லை. ஆண்கள் ஒரு வரிசையிலும் பெண்கள் தனியே ஒரு வரிசையிலும் வந்தனர். பெண்கள் பகுதியில் நெரிசலுடன் பதற்றம் காணப்பட்டமையினால் அவர்கள் விழுந்து விட்டனர்.
பின்னர் விழுந்தவர்கள் மீது ஏனையோர் ஏறிச்செல்வதனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இது அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இல்லை.
1500 முதல் 2000 பேர் வரை காணப்பட்டனர். சன நெரிசலில் சிக்குண்டவர்களை மீட்க அரை மணித்தியாலம் சென்றது எனக் கூறினர்.
இதேவேளை குறித்த நிதி நிவாரணத்தை வழங்கியவர் பிரபல வர்த்தகர் ஒருவர் எனவும், அவர் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் இவ்வாறு வழங்கி வரக்கூடியவர் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இதுபோன்று சம்பவம் இடம்பெறவில்லை என்றும், இற்த முறையே அந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த 2 மாத காலமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல் நிலையே இன்றைய சம்பவத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இது முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வு அல்ல என்றும், அவர்களின் சொந்த வீட்டிலேயே இந்த உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் அவர் இந்த வருடத்திற்கான உதவி தொகையை கடந்த நாட்களில் வழங்கிவிட்டதாகவும், இன்றும் நிவாரணம் வழங்குவதாக செய்தி பரவியதையடுத்தே மக்கள் அங்கு ஒன்று கூடியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
காயமடைந்த 9 பேரில் 8 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment