பிரதமருடனான இன்றைய விஷேட கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், காலை 10.15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 12.45 மணியளவில் நிறைவடைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தற்போதைய நிலைவரம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
மேலும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட விளக்கம் ஒன்றை வழங்கியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
127 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்குவதற்கு உலக வங்கி ஒப்பந்தம் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் இதுவரை வழஙக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல குறிப்பிட்டார்.
கொரோனா தொடர்பிலான செலவினங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் கொவிட் – 19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment