Header Ads

அமைச்சர் மனோ கணேசனுக்கு இன்று ஏற்பட்ட சோதனை - 400 தமிழர்கள் பாதிப்பு

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் தமிழ் ஆசிரியர்களுக்கு வழங்க முயற்சிக்கப்பட்ட நியமனங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டில் நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஜனக்க வெலிவத்த சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – மாகுபுர பகுதியிலுள்ள தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிலும், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வருகைத் தந்த அதிகாரிகள் நியமனங்களை வழங்கும் நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர்.

 ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் நியமனங்கள் வழங்குவது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த நியமனங்களை வழங்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதாக ஜனக்க வெலிவத்த கூறியுள்ளார்.

நுவரெலியா, பதுளை, ஹபுத்தலை, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 400 பேர் நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இது நியமனம் வழங்கும் நிகழ்வு கிடையாது என கூறிய விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரியொருவர், இது அலரிமாளிகையில் கடந்த 11ஆம் திகதி வழங்கப்பட்ட நியமனங்களுக்கான பயிற்சிகள் எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.