ஆத்திரத்தில் இருக்கும் பொதுஜன பெரமுனவின் மறைமுக நோக்கம்
மக்களை ஏமாற்றி சர்வாதிகார அடிமை ஆட்சியை ஏற்படுத்துவதே குடும்ப வாதத்தை அடிப்படையாக கொண்ட பொதுஜன பெரமுன தலைவர்களின் மறைமுக எதிர்பார்ப்பே அன்றி, ஜனநாயக ஆட்சியை பெற்றுக்கொடுப்பது அல்ல என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் எதிர்கால பயணம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு விளக்குவதற்காக நடத்தப்பட்ட சில கூட்டங்களில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியின் கீழ் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.
பொதுஜன பெரமுன மேடையில் இருக்கும் குடும்ப வாதத்திற்கு அடிபணிந்துள்ள அனைவரும் ஜனநாயக அரசியலில் ஈடுபடும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராக பகையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
மக்களை இரும்பு காலணிகளால் மிதிக்கும் ஹிட்லர் யுகத்தின் ஆட்சி முறையை ஏற்படுத்துவதே அவர்களின் ஒரே நோக்கம்.
சிலர் மேற்கொண்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தற்போது நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டு , வெளிநாட்டு கடன்களுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் ஊதியம் 107 சத வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, நகர அபிவிருத்தி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி, போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், பொதுஜன பெரமுனவினர் ஆத்திரத்தில் செயற்பட்டு வருகின்றனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் தீர்மானகரமானது. இலங்கையின் கலாசாரத்தை மதிக்கும், இன, மத, ஜாதி பேதங்கள் இன்றி, மக்களை நேசிக்கும் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதா அல்லது, அமெரிக்க பிரஜையை ஜனாதிபதியாக தெரிவு செய்வதா?.
இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை ஏகாதிபத்திவாதிகளுக்கு காட்டிக்கொடுப்பதா ? என்பதை நன்றாக சிந்தித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
இதனால், பேதங்களை மறந்து நாட்டை பற்றி சிந்தித்து, நாட்டின் இறையாண்மை பற்றி சிந்தித்து, அன்னப் பறவை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment