பேசு பொருளாகியுள்ள சஜிதின் இறப்பர் செருப்பும் அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும்
பழைய இறப்பர் செருப்பும், அரச அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும் அணிந்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று சிலர் பேஸ்புக்கில் விமர்சிக்கின்றார்கள்.
ஆனால் இவற்றிலிருந்தே சஜித் பிரேமதாச பொது மக்களின் சேவையாளன் என்பது தெளிவாகின்றது.
அத்தகைய ஒருவருக்கு இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது நாட்டின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ராஜபக்ஷவே செயற்படும் வகையில் ஒரு குடும்பத்திடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா? என்று தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஹப்புத்தளை நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
இப்போது தான் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எமது மனங்களில் அரசியல் ரீதியில் ஒருவித தைரியம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் சுமார் 25 வருடங்களுக்கும் அதிக காலத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்கான பயணத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
நாம் முன்னின்று போராடி ஜனாதிபதியாக்கிய ஒருவர் வேறு ஒரு கட்சியுடன் இணைந்து செயற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி கைவிடப்பட்டது.
அத்தகையதொரு தருணத்தில் கடந்த காலத்தில் நாம் மிகவும் நேசித்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாகும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.
சிலர் பேஸ்புக் பக்கங்களில் சஜித் பிரேமதாசவை விமர்சிக்கின்றார்கள். பழைய இறப்பர் செருப்பும், அரச அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும் அணிந்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று அவர்கள் கேட்கின்றார்கள்.
ஆனால் இவற்றிலிருந்தே சஜித் பிரேமதாச பொதுமக்களின் சேவையாளன் என்பது தெளிவாகின்றது. அவருக்கு மாளிகை போன்ற இல்லங்களுக்கோ அல்லது வெளிநாட் டுக் கல்விக்கோ எவ்வித குறையும் இருக்கவில்லை. ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் சென்று சேவையாற்ற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த் துக் களமிறங்கியிருக்கின்ற கோத்தபாய (அச்சம்) என்ற மனிதர் அரசியலில் பிரதேச சபைத் தேர்தலில் கூட களமிறங்கியதில்லை.
குறைந்தபட்சம் பிரதேச சபை நிர்வாகம் தொடர்பில் கூட அறியாத நபரொருவரால் இந்த நாட்டைச் சீரமைக்க முடியும் என்று கருதுகின்றீர்களா? ஆனால் சஜித் பிரேமதாசவிற்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுதான்.

Post a Comment