முணுமுணுங்கும் ஹிஸ்புல்லா; யாருடைய ஏஜண்டும் இல்லையாம் - நம்பிட்டீங்களா மக்காள்ஸ்

நான் யாருடைய முகவராகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் முகவராக மாத்திரம்தான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் படுகொலை செய்யப்பட்டால் தேர்தல் சட்டத்தின் படி உடனடியாக இன்னொரு வேட்பாளரை நிறுத்தி இந்தப் புனித போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியும்.
நான் எந்த நேரமும் மரணிக்கப்படலாம்.எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம். என்னை படுகொலை செய்வதற்காக சர்வதேச சக்திகள் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்களே உங்களுடைய இதயத்தின் மீது கையை வைத்து சிந்தியுங்கள்.
நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த தேர்தலுக்குப் பின்னால் வரப் போகின்ற காலம் எவ்வாறான பயங்கரமான காலம். சகல சட்டங்களையும் சகல அதிகாரங்களையும் பறிக்கச் செய்து வெறுமனே அடிமைச்சமூகமாக மாற்ற வேண்டுமென்று திட்டமிடுகின்ற அத்தனை எதிரிகளும் இரண்டு முகாம்களிலும் இருக்கின்றார்கள்.
வெறும் ஒரு அமைச்சராக நானும் நீங்களும் இருந்து ஆமா சாமி போட முடியுமே தவிர வேறு எதையும் செய்ய முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகள் ஆமா சாமி போட்டு முஸ்லிம் சமுதாயத்தை இன்று வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றோம். இவ்வாறான ஆமா சாமி போடுகின்ற சமுதாயமாக நாம் இருக்க முடியுமே தவிர இந்த சமுதாயத்துக்காக பேசுகின்ற இந்த சமுதாயத்துக்கு வருகின்ற தடைகளை உடைத்தெறிகின்ற தகர்க்கின்ற ஒரு சக்தியாக நாங்கள் இருக்க முடியாது.
என்னை பொறுத்தவரை நான் 2000ஆம் ஆண்டே உயிரிழந்து விட்டேன். அதன் பின்னரான ஒவ்வொரு நாட்களும் எனக்கு போனஸ் போன்றதுதான். நான் யாருக்கும் அஞ்சுபவனுமில்லை, அஞ்சுவதுமில்லை. அஞ்சப்போவதுமில்லை.
எனது பல்கலைக்கழகத்தை அல்லாஹ் பாதுகாப்பான். அதனை பாதுகாக்க இங்கு நான் போட்டியிடவில்லை.
முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கவே நான் போட்டியிடுகிறேன். இன்னும் 25 ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும், அதற்கான நிரலை நான் தயாரித்துள்ளேன்.
இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளில் மிக மூத்தவன் நான் தான். நான் யாருடைய முகவரும் அல்ல. நான் முஸ்லிம்களின் முகவர் மாத்திரமேயாகும். ஜனாதிபதியாகும் எண்ணம் ஒன்றும் எனக்கில்லை அந்தளவுக்கு நான் முட்டாள் இல்லை.
எனவே தான் முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வெற்றி பெறும் ஜனாதிபதி வேட்பாளருக்கே நாம் ஆதரவு வழங்குவோம்.
நான் ஜனாதிபதியாகும் வேட்பாளர் இல்லை. வெற்றி பெறும் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment