Header Ads

கொரோனா... இலங்கை வரும் சீனர்கள் ஏன் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை?

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் சூழலில், சீனாவிலிருந்து வருகைத் தரும் சீன பிரஜைகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாமை குறித்து இலங்கையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

தென்கொரியா, இரான் மற்றும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகள் மட்டுமே இலங்கையில் 14 நாட்கள் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நிலையங்களுக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் இந்த கேள்வி எழுந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெளிவூட்டல்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலம் முதல் இலங்கை சுகாதார தரப்பினர், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை எட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, அவசரமான தீர்மானங்களையும், பிந்திய நிலையிலான தீர்மானங்களையும் தாம் ஒருபோதும் எட்டப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதான நாடாக இலங்கை திகழ்வதை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

சுகாதார பிரிவில் அபாயத்தை ஆராயும் நடைமுறையொன்று உள்ளதாகவும், அதன்பிரகாரமே தமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறையின் பிரகாரம், இந்த வைரஸ் தொற்று உலகில் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது எனவும், அதன் முன்னேற்றம் தொடர்பிலும் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வைரஸ் தொற்று காணப்படுகின்ற நாடுகளுக்கும், இலங்கைக்குமான தொடர்புகள் குறித்தும் சுகாதார அபாயத்தை ஆராயும் நடைமுறையின் கீழ் அவதானிக்கப்படும் என டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதன்பிரகாரம், சீனாவை முழுமையாக ஆராயும் போது இறுதியாக 20ற்கும் குறைவான நோயாளர்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனா, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆரம்பத்ததிலிருந்து மிக வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அபாயகர நிலைமையை ஆராயும் நடைமுறையின் பிரகாரம், சீன பிரஜையொருவரிடமிருந்து இந்த வைரஸ் தொற்று இலங்கையர் ஒருவருக்கு பரவும் அபாயம் தற்போது மிகவும் குறைவடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார்.

இதனாலேயே, சீன நாட்டு பிரஜைகள், கொரோனா தொற்று தொடர்பில் ஆராயும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாது, ஏனைய அபாயகர நிலைமையிலுள்ள மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் மாத்திரம் அந்த இடத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இத்தாலி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவுடன் ஒப்பிடுகையில், இத்தாலியிலிருந்து வெளியாகும் அச்சுறுத்தல் மிகவும் பாரதூரமானது என அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, தமது இந்த நடைமுறைக்கு சில நாடுகள் உள்வாங்கப்படுலாம் எனவும், சில நாடுகள் உள்வாங்கப்படாதிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாமையானது, மிகவும் தீர்க்கமாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு எனவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

(பிபிசி)
Powered by Blogger.