கொரோனா வைரஸ் போரில் வென்றுவிட்டோம் - நியூஸிலாந்து பிரதமர் அறிவிப்பு
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் “அந்த போரில் வென்றுவிட்டதாக” நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொரோனா வைரஸை “இல்லாது ஒழிக்கும் இலக்கை” நியூசிலாந்து அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
“இதற்கு நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றே இல்லையென்று அர்த்தம் கிடையாது. ஆனால், நோய்த்தொற்று பரவலின் அனைத்து மூலங்களையும் கண்டறிந்துவிட்டோம் என்று அர்த்தம்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூசிலாந்தில் இன்று புதிதாக ஒரேயொரு நோய்த்தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.
இதுவரை நியூசிலாந்து முழுவதும் 1500க்கும் குறைவானவர்களுக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களில் 80 சதவீதத்தினர் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர். 19 உயிரிழந்துள்ளனர்.

Post a Comment