கொழும்பில் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி
கொழும்பு நகர வீதிகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிட கட்டணங்களை மீண்டும் வசூலிப்பதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமீபத்தில் குறித்த கட்டணம் அறிவிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், குறித்த வாகன தரிப்பிட கட்டணங்களை மீள அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு மணித்தியாலயத்திற்காக சிற்றூர்தி மற்றும் மகிழூர்திகளுக்கான தரிப்பிட கட்டணம் ரூபா.50 அறவிடப்படுவதோடு, உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு ரூபா.20 அறிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பேருந்துகள் மற்றும் பாரவூர்திகளுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா.70 அறவிடப்படும் என்பதோடு பாடசாலை சிற்றூர்திகளுக்கு மாதாந்தம் ரூபா.600 அறவிடப்படும் அதேவேளை, பாடசாலை பேருந்துகளுக்கு மாதாந்தம் ரூபா.1000 அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அலுவலகங்களுக்கு பயணிக்கும் சிற்றூர்திகளிடமிருந்து 1200 ரூபாவும், பேருந்துகளுக்கு 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வாகன தரிப்பிட கட்டணம் செலுத்தாதவர்கள் தாமத கட்டண பட்டியலில் உள்ளடக்கப்படுவதோடு, பணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Post a Comment