சஜித்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை - ரிஷாத்தின் விளக்கம்
இந்த நாட்டில் 30 வருட கால யுத்தத்தின் பின்னராவது மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று பார்த்தால், அதற்கும் இந்த இனவாதிகள் இடம்கொடுக்கிறார்கள் இல்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் நேற்று(30) நடை பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிசாத் பதீயுதீன் இதனைக் கூறியுள்ளார்.
எமது நாட்டு வரலாற்றில் கடந்த 70 வருட அரசியல் காலத்தில் 30 வருடம் யுத்தம் காணப்பட்டது. ஏனைய காலத்திலாவது மக்கள் நிம்மதியாக வாழுவார்கள் என்றால் அதற்கும் இனவாதிகள் இடம் கொடுக்கின்றார்கள் இல்லை.
சிலர் எம்மிடம் கேட்கின்றனர் ஏன் சஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று, ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். எமது வேண்டுகோள் எல்லாம் இந்த நாட்டில் அச்சமற்ற முறையில் பாதுகப்பான சமூகமாக எமது மக்கள் வாழவேண்டும்.
சட்டங்கள் சகலருக்கும் சமமானதாக இருக்க வேண்டும், அநீதிக்குட்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதனை ஏற்படுத்தும் நோக்கில் சஜித் பிரேமதாச தமது கொள்கையை வெளியிடுகின்ற போது, அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் இந்த நாட்டின் இரண்டைரைக் கோடி மக்களுடன் அவர் ஒப்பந்தம் செய்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த தேர்தலில் இறைவனின் நாட்டமின்றி எந்த சக்திகள் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுக்க முயன்றாலும் அது ஒரு போதும் முடியாத காரியமாகும். நாட்டின் சுபீட்சத்துக்காக ஒன்று படுவது சகல அரசியல் கட்சிகளினதும் தேவையகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Post a Comment