Header Ads

சிறுபான்மை மக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் - எச்சரிக்கும் ரிஷாத்


இனவாதிகள், மதவாதிகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது எனவும் தேர்தலில் வெற்றி கொள்வதற்காக சஹ்ரானுடைய கதைகளை போடுகின்றார்கள் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில்  கிண்ணியா நகரசபை பொது மைதானத்தில் நேற்று மாலை (24) இடம்பெற்ற இளைஞர் மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் கருத்துரைக்கையில் 
 தேர்தலை வெற்றி கொள்வதற்காக தற்பொழுது மொட்டு கட்சியினர் சஹ்ரான் உடைய கதைகளை பரப்பி மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழ் முஸ்லிம்  மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக இரண்டு தரப்பினரையும் மோதவிடும் நோக்கில் பல முரண்பாடான கருத்துக்களை முன்னிறுத்தி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை தமிழ் கிராமங்களில் ஒரு கருத்தையும் முஸ்லிம் கிராமத்தில் இன்னுமொரு கருத்துக்களையும் கூறி மக்களை திசை திருப்பி மொட்டு கட்சியினர்   வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் எமது சிறுபான்மை சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக இறங்கி செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

 கடந்த காலங்களில் தாக்குதலில் ஈடுபட்ட  சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என கூறி முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல சதித் திட்டங்களை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் இலங்கை நாட்டின் பொலிசார் நேர்மையாகச் ஏற்பட்டமையினால் நாங்கள் குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் பலர் எம்மை குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு பல குற்றச்சாட்டுக்களையும், வழக்குகளையும் தாக்கல் செய்து வந்ததையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். 

 பொலிசார் நேர்மையாக செயற்பட்டமையினால் சிறந்த தீர்வு கிடைத்துள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சட்டத்தை யாருக்கும் கையிலெடுக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற சஜித் பிரேமதாசவுக்கு நாங்கள் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும். 

இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் சிறுபான்மையின மக்கள் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து அன்னத்திற்கு  வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதாகவும் ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
Powered by Blogger.